சுங்கச் சாவடி கட்டண உயர்வு: தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்!

சுங்கச் சாவடி கட்டண உயர்வு: தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம்!

சுங்கச் சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கார், லாரி என வாகனங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விகிதாச்சார அடிப்படையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சென்னை போரூரில் உள்ள சுங்கக் சாவடியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, சாலைகள் சீரமைக்கப்படாத நிலையில் சுங்கச் சாவடி கட்டணத்தை மட்டும் நாளுக்குநாள் அதிகரித்து வருவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், சுங்கச் சாவடி கட்டண உயர்வு, ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் விலைவாசியை மேலும் அதிகரிக்க வித்திடும் என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசுடன் இணைந்து, தமிழ்நாடு அரசும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படிக்க : ”தினமும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு வருவான்” மாரிமுத்துவின் பள்ளி ஆசிரியர்கள் நெகிழ்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்க சாவடியில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலாவதியான பரனூர் சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. 

கள்ளக்குறிச்சியில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மடூர் கிராமம் அருகே உள்ள சுங்கச்சாவடியை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, தேமுதிகவினர் சுங்கச்சாவடி வசூல் அறையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போராக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.