எனக்கு பிரதமர் மோடியை நல்லா தெரியும்… இனி என்கிட்ட கடை வாடகை கேப்ப? கட்டிட உரிமையாளரை மிரட்டி அதிரடி!  

கோவையில் மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடை நடத்திவரும் நபர் கடந்த ஒரு வருடமாக வாடகை தராமல் தான் பாஜகவில் இருப்பதாகவும், பிரதமர் மோடி பெயரை சொல்லியும் மிரட்டுவதாக கட்டிட உரிமையாளர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். 

எனக்கு பிரதமர் மோடியை நல்லா தெரியும்… இனி என்கிட்ட கடை வாடகை கேப்ப? கட்டிட உரிமையாளரை மிரட்டி அதிரடி!   

சென்னையை சேர்ந்த முத்துசாமி என்பவர் கோவை சித்தாபுதூர் பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான இரண்டு தளம் கொண்ட கட்டிடத்தை மெடிக்கல் ஸ்டோர் வைத்துக்கொள்வதற்காக கடந்த 2018 ம் ஆண்டு சிரில் என்பவருக்கு ரூ.54,022க்கு மாத வாடகை நிர்ணயம் செய்ததுடன் அதற்கான முன்பணமாக ரூபாய் 300000 பெற்றுக்கொண்டு வாடகைக்கு விட்டுள்ளார். அதில் சிரில் ஈ.வி.எஸ் கிளினிக்-பார்மசி மற்றும் மத்திய அரசின் ஜனஉசாதி மருந்துக்கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சிரில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஆகஸ்ட் வரை தளத்திற்கு வாடகையாக ரூபாய் 54,022 விதம் 12 மாதங்களுக்கு கொடுக்கவேண்டிய வாடகை கொடுக்காமல் இருந்து உள்ளார். இது தொடர்பாக கட்டட உரிமையாளர் முத்துசாமி கடந்த ஒரு வருடமாக வாடகை கேட்ட நிலையில் சிரில், முத்துசாமியை ஆட்கள் வைத்து மிரட்டியதுடன், வாடகை கொடுக்க முடியாது எனவும், தான் பாஜகவில் இருப்பதாகவும் பிரதமர் மோடியுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் கூறி வாடகை தர மறுத்ததுடன் உன்னால் முடிந்ததை செய்து கொள்ளவும் எனவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முத்துசாமி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய முத்துசாமி, தனக்கு சேர வேண்டிய வாடகை பாக்கியை தர மறுக்கும் சிரில் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனக்கு சேர வேண்டிய வாடகையை பாக்கிகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் அதேபோல் கடையை காலி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிரில் கோவையில் நடத்தி வரும் 8 மத்திய அரசின் மலிவு விலை மருந்து கடைகளுக்கு கட்டட வாடகை தராமல் சுமார் 30 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்டவர், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

இதேபோல் சிரில் மருந்து வாங்கியதில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மீது மருந்து வாங்கியதற்கான கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் செய்த மோசடி காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் முத்துசாமி தெரிவித்தார்.