மருத்துவப்படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அறிமுகம்..!

மருத்துவப்படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல்  முகவரி அறிமுகம்..!

மருத்துவப்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவ மாணவர் சேர்க்கை : 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பெற்றது. அதனைத் தாெடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 19, 20 ஆகியத் தேதிகளில் சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில் 565 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டது.

மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு : 

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி, தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் 31 ஆம் தேதி வழங்கப்பட்டன. மாணவர்கள் 4 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்று 7 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் கல்லூரியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்விக்கட்டண நிர்ணயம் : 

மேலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் ஒதுக்கீட்டிற்கான கட்டணங்களை செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் கட்டணங்களை செலுத்தியப் பின்னரே ஒதுக்கீட்டு ஆணைகளை பெற முடியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக, முதல்முறையாக கல்விக் கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு பெற்று வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. 

மின்னஞ்சல் முகவரி : 

அதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை இளநிலை படிப்புகளின் புகார்களை ddugselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், முதுநிலை படிப்புகளின் புகார்களை ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். தனியார் மருத்துவக்கல்லூரிக்கான கட்டண விபரங்கள் https://tnmedicalselection.net/news/05112022060421.pdf என்ற இணையத முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை : 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தனியார் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க : ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக..முற்றும் வார்த்தை போர்..