மீண்டும் பரவுகிறதா கொரோனா...? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா...? முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறுகிறது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது. பின்னர் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது படிப்படியாக அதன் தீவிரம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், உலக அளவில் புதிதாக பிஎப்-7 என்ற வைரஸ் பரவி வருகிறது.  

ஓமிக்ரான் வைரஸின் திரிபான பிஎப்-7 என்ற வைரஸ் சீனாவில் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் இது அண்டை நாடுகளுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் மேல் சுவாசக்குழாயை பாதிக்கிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது மற்ற மாநிலங்களுக்கும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கபட்டு வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. உருமாறிய புதிய வகை கொரோனா பரவும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

-- சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் மஸ்தான் - முதலமைச்சர்