கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? - அண்ணாமலை சவால்

கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா? - அண்ணாமலை சவால்

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு, 1967 லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரஸ் மோசமான நிலையில் உள்ளது. திமுகவின் தலைவர் என்ற முறையில் இந்த வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு மாநில தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையையும் தீர்மானிக்க முடியாது. பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலம் குஜராத். குஜராத் தேர்தலில் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர். உள்ளூர் காரணிகளும் பாஜகவுக்கு உதவியது. குஜராத்தில் வாக்காளர்கள் வாக்களித்தது போல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாக்களிப்பார்கள் என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும். குஜராத்தில் பாஜவிடம் தோல்வியடைந்தாலும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ படுதோல்வி அடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் பாஜவுக்கு ஆதரவு மாறுபட்டு இருப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். 

மேலும், தேசிய அளவில் பாஜக தனது பலத்தை அதிகரித்துள்ளதோடு, தமிழகத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக 4 எம்எல்ஏ சீட்களில் வென்றிருக்கிறது. அதோடு, ஆளும் திமுகவை பாஜக மாநில பிரிவு பல்வேறு பிரச்னைகளில் தாக்கி வருகிறது. எதிர்காலத்தில் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் அமைப்பாக பாஜ உருவெடுக்கச் செய்யும் முயற்சிகள்  பற்றிய கருத்து குறித்து கேட்ட போது, தெளிவாகக் கூறுகிறேன். தாமோ, தமிழக மக்களோ பாஜவை தமிழகத்தில் முதன்மை எதிர் கட்சியாக பார்க்கவில்லை. 2001 மாநில சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தோளில் சவாரி செய்த அக்கட்சி 4 எம்எல்ஏக்களைப் பெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, 2021ல் மீண்டும் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவின் பலம் இதுதான். அவர்கள் தனித்து நின்றால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவை கட்டுப்படுத்தி வளர பாஜக முயற்சிக்கிறது. இது ஒரு பலவீனமான உத்தி மட்டுமல்ல, அது தவறான ஒன்றாகும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடையவில்லை. அப்படியொரு மாயையை உருவாக்க முயற்சி செய்கிறது என கூறினார். 

முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது  அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. மேலும் 1967லிருந்து திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜக 2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். தமிழக பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது என்று கூறிய அவர். தான் உங்களுக்கு சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

-- சுஜிதா ஜோதி 

இதையும் படிக்க : சபரிமலையில் அமையவுள்ள புதிய விமான நிலையம்...!