பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு... இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில், மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு... இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நடப்பாண்டு நடைபெறவிருந்த பிளஸ் 2 தேர்வானது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதோடு, உயர்கல்வி சேர்க்கைக்காக விரைவில் மாணவர்களின் மதிப்பெண் விவரமும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
 
அதன்படி எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 தேர்வில் 20 சதவீதம் , பிளஸ் 2 செய்முறை தேர்வு , உள்மதிப்பீடு மதிப்பெண்ணில் இருந்து 30 சதவீதம் என மொத்தம் நூறு சதவீதத்திற்கு கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.
 
அந்தவகையில் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த மதிப்பெண் விவரங்களை கடந்த 19ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு,  மாணவர்களின் வசதிக்காக குறிப்பிட்ட வலைதளங்களின் விவரங்களும் அறிவித்திருந்தார்.
 
இந்தநிலையில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், www.dge.tn. gov.in மற்றும் www.dge.tn.nic.in என்ற தேர்வுத்துறையின் இணையதளங்கள் வாயிலாக மதிப்பெண் பட்டியலை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்லாது மாணவர்கள் வசதிக்காக அவர்கள் தேர்வு விண்ணப்பத்தில் பதிவு செய்திருந்த செல்போன் எண் வாயிலாகவும் மதிப்பெண் பட்டியல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழை பெற விரும்புவோர், பதிவு எண், பிறந்த தேதி போன்றவற்றை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.