அதிமுக பொதுக்குழு கூட்டம் - 23 தீர்மானங்களும் நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் - 23 தீர்மானங்களும் நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை புறநகர் பகுதியான வானகரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கான தனிதீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டிமிட்டிருந்தது. ஆனால் ஒற்றை தலைமை முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி முயற்சியாக நீதிமன்றத்தை நாடியது.

அதன்படி பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கலாமே தவிர தீர்மானம் நிறைவேற்ற கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அப்போது பெரும் திரளான தொண்டர்கள் கூட்டத்தில் வீற்றிருக்க பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார்.

அப்போது மேடை ஏறிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசத்துடன் அறிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும் தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறினார். மேலும் அடுத்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை நீர்மானத்துடன் சேர்த்து 23  தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றார். இதையடுத்து 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுக-வில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.