ஜெயலலிதாவின் பொருட்கள் காணவில்லை..! முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு...!

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பற்றிருந்த ஜெயலலிதாவின் முக்கிய பொருள்களை காணவில்லை என சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் பொருட்கள் காணவில்லை..! முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு...!

சென்னை வானகரத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தர்ணாவில் ஈடுபட்டார்.  இதனால்  ஓ.பி.எஸ். மற்றும் ஈ. பி.எஸ். ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சூழல் நிலவியது.  இதையடுத்து அன்று மாலை தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர்  சாய் வர்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து, அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி-யிடம் அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது. காலை 11 மணியளவில் அதிமுக அலுவலகத்திற்கு வந்த வட்டாட்சியர் ஜெகஜீவன், அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி சாவியை அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம்  ஒப்படைத்தார்.

அதன் பின்னர் அலுவலகத்தை பார்வையிட சென்றனர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள்.

இதன் பிறகு, பேசிய சி.வி.சண்முகம், "அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருள்களை காணவில்லை. அது அனைத்தும் ஜெயலலிதாவுக்கு வழக்கப்பட்ட நினைவு பரிசுகள். மேலும் இவற்றில் ஜெயலலிதாவின் செங்கோல், வெள்ளிவேல் ஆகியவையும் காணவில்லை என தெரிவித்தார்.

ஜூலை 11 ஆம் தேதி சம்பவத்தன்று, ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்பட்டு வரும் நிலையில், அலுவலகத்துக்குள் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்று சிவி சண்முகம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.