"நீதிமன்றம் ஒரு கட்சிக்கு சொந்தமில்லை; குப்பனுக்கும் சுப்பனுக்குமானது" -நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்!

 "நீதிமன்றம் ஒரு கட்சிக்கு சொந்தமில்லை; குப்பனுக்கும் சுப்பனுக்குமானது" -நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்!

 நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது என நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக  76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. 

கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022 ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 44 லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக  வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த  வழக்குகள்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, லஞ்சஓழிப்புத் துறையினரின் விளக்கங்களை கேட்காமல் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தியதாகி விடும் எனவும் விசாரணை நடைமுறையில் எந்த தவறும் இல்லை என்றார்.

அதற்கு, வழக்கில் பதிலளிக்க மட்டுமே உத்தரவிடப்படுகிறது என்றும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 2021ம் ஆண்டு இந்த வழக்குகளில் விடுவிக்க கோரிய மனுக்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, ஆட்சி மாற்றத்துக்கு பின், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

இந்த வழக்கில் தவறான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும், இரு உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த விவகாரத்தில்  நீதிமன்றம் கண்மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும், இதை அனுமதித்தால் கடமை தவறியதாகி விடும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. ஆனால் இந்த நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2021க்கு பிறகு தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், உண்மையில் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம்  அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:தவறை தட்டி கேட்ட இளைஞருக்கு, சமூக விரோதிகளின் சரமாரி பரிசு!!