கே.சி.பழனிசாமி வழக்கில் நீதிபதி அளித்த உத்தரவு என்ன...?

கே.சி.பழனிசாமி வழக்கில் நீதிபதி அளித்த உத்தரவு என்ன...?

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து, அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு:

கடந்தாண்டு நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில், ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை எதிர்த்தும், இத்தேர்தலை ரத்து செய்யக்கோரியும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். 

ஈபிஎஸ் தரப்பு வாதம்:

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈ.பி.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், உட்கட்சி விவகாரம் பற்றி வழக்கு தொடர முடியாது” என சுட்டிக் காட்டி பேசினார். எனவே கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கே.சி.பழனிசாமி தரப்பு வாதம்:

ஆனால், கே.சி. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து, தனக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்றும், எனவே இந்த நீக்கம் செல்லாது என வாதிட்டனர்.

நீதிபதி கேள்வி:

வாதத்துக்கு இடையே குறுக்கிட்ட நீதிபதி, "இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் ஏதாவது மனு நிலுவையில் உள்ளதா? " எனவும் கேட்டார். அப்போது மனுதாரர் தரப்பில், "தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும்" தெரிவிக்கப்பட்டது.

மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு:

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என கூறியதோடு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும், நீதிபதி பிறப்பித்த உத்தரவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கே.சி. பழனிசாமி தொடர்ந்த இந்த மனுவை நிராகரிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com