மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவன்....

கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ விவகாரம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும்நிலையில், சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தினர் அவர் மீது புகார் அளித்துள்ளது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவன்....

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ‘சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கியுள்ளன. புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

 இதற்கிடையில் சிவசங்கர் பாபாவின் ஆசிரமத்தில் கே டி ராகவனின் மனைவி நடனம் கற்க சென்றதன் மூலம், ஆசிரமத்துடன் ராகவனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிவசங்கர் பாபாவின் கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய  சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவர் சண்முகராஜா,  மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீதும், பாபாவின் நிறுவன அட்மின் ஜானகி என்பவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார். 

சிவசங்கர் பாபா சிறையில் இருக்கும் சமயத்தில், கேடி.ராகவன் ஆதரவுடன் ஜானகி குழுவினர் பிராமணர் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து பாபாவின் சொத்துக்களை அபரிக்க முயற்சி செய்து வருவதாக அந்த இயக்கத்தினர் குற்றம் சுமத்தினர். மேலும் ஜானகியின் அத்தனை செயல்களுக்கும் பாஜகவை சேர்ந்த கே.டி ராகவன் துணையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

பாபாவை கைது செய்ய முடியாது என்று கூறியவர்கள், பின்னர் கைது செய்தவுடன் 3 நாளில் வெளியே வந்துவிடுவார் என்று கூறி ஏமாற்றியதாகவும்  கூறும் சண்முகராஜா, கேடி.ராகவனின் 30க்கும் மேற்பட்ட அடியாளட்கள் பாபாவின் ஆசிரமத்தில் தங்கி, மற்றவர்களை மிரட்டி வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவை கைது செய்யாமல் பாதுகாப்பதாகக் கூறி 3 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி ராகவன் மீது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.