பள்ளிக்கு சீர் வரிசையா? பட்டையைக் கிளப்பிய கிராம மக்கள்!

கோவில்பட்டி அருகே அரசு பள்ளிக்கு கல்வி சீர் மற்றும் வளர்ச்சி நிதியை கிராம மக்கள் வழங்கினர்.
பள்ளிக்கு சீர் வரிசையா? பட்டையைக் கிளப்பிய கிராம மக்கள்!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வெம்பூரில், 1979ம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொது மக்கள் ஒருங்கிணைந்து ரூ 1 லட்சத்து 70 ஆயிரம் நிதி திரட்டி, பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு டேபிள், நாற்காலி, பீரோ, மின்வசிறி, கடிகாரம், சாக்பீஸ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் என 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருள்கள் வாங்கியுள்ளனர்.

இதனை சீர் வரிசை போல, மேள தாளம் முழங்க, பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் பள்ளிக்கு ஊர்வலமாக வந்தனர். மேல்நிலைப்பள்ளிக்கு கிராம மக்கள் ரூ 1லட்சம் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீராக வழங்கியது மட்டுமின்றி, ரூ 70 ஆயிரத்தினை பள்ளி வளர்ச்சி நிதியாக வழங்கி அசத்தியுள்ளனர்.

மேலும் தங்கள் கொண்டு வந்த பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமாரி மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கினார்.பள்ளிக்கு தேவையான பொருள்கள் மற்றும் வளர்ச்சி நிதி வழங்கிய கிராம மக்களின் செயல்பாட்டினை பலரும் பாராட்டியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com