கே.எஸ் அழகிரியின் பேரன் vs ஐ.ஏ.எஸ் அதிகாரி..! இரவில் காவல்நிலையத்தில் பரபரப்பு..!

கே.எஸ் அழகிரியின் பேரன் vs ஐ.ஏ.எஸ் அதிகாரி..! இரவில் காவல்நிலையத்தில் பரபரப்பு..!

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியின் உறவினரான பெண்ணை தாக்கிய இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.ஏ.எஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு. மேலும், அவரது கார் ஓட்டுனர் முத்து ராஜா என்பவர் கைது. 

போட்டி:

சென்னை கே.கே நகரை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் தனது தங்கை மற்றும் தாயுடன் அண்ணா நகரில் இருந்து அசோக் பில்லர் நோக்கி காரில் சென்று  கொண்டிருந்தார்.  அப்பொழுது கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று அதிவேகமாக முந்தி செல்வது போலவும், தொடர்ந்து ஒலி எழுப்பியும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அசோக் நகர் பகுதி அருகே வரும்போது ஹோண்டா சிட்டி கார் முந்தி செல்ல முயற்சி செய்தபோது காருக்குள் இருந்த பெண்ணுக்கும், சுபாஷ்-க்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு:

இதனையடுத்து அந்த பெண் யாரோ ஒரு நபருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் லேசான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த அந்த நபருக்கும் சுபாஷ்-க்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் சுபாஷ் மற்றும் அவரது தங்கை, தாய் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆபாசமாகப் பேசியதுடன் சுபாஷ்-ஐ கையால் தாக்கியுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சுபாஷ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கே.எஸ் அழகிரியின் பேரன் vs ஐ.ஏ.எஸ் அதிகாரி:

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் சுபாஷ் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரியின் பேரன் என்பது தெரியவந்தது. மேலும் மதுபோதையில் சுபாஷை தாக்கியது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் என்பதும், காரில் வந்த பெண் கண்ணனின் உறவினரான விஜய லட்சுமி என்பதும் தெரிய வந்தது. 

பரபரப்பு:

இதனையடுத்து இரண்டு தரப்பினரையும் அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து துணை ஆணையர் முன்னிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி உறவினரை தாக்கிய சம்பவத்தால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியும் காவல் நிலையத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

கார் ஓட்டுநர் கைது:

மேலும் கூடுதல் ஆணையர் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய கூறி காவல்துறை அதிகாரியிடம் அழகிரி பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளார். இதையடுத்து கண்ணன் மதுபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்வதற்கு நள்ளிரவில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியின் காரை ஓட்டி வந்த கண்ணனின் கார் ஓட்டுனர் முத்துராஜா என்பவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்றிரவே அவரை கைது செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு:

இதனையடுத்து இன்று இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கண்ணன் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளிலும் அவரது உறவினர் விஜயலட்சுமி மீது 4 பிரிவுகளின் கீழும் அசோக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.