திரைப்பட பாணியில் ஆடுகளத்தில் உயிரை விட்ட கபடி வீரர்...மகனை இழந்து நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்..!

திரைப்பட பாணியில் ஆடுகளத்தில் உயிரை விட்ட கபடி வீரர்...மகனை இழந்து நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்..!

கபடி விளையாடும் போது களத்திலேயே கபடி வீரர் உயிர்விட்டதால், பெற்றோர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர்.

வெண்ணிலா கபடி குழு:

வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக வரும் விஷ்ணுவிஷால் பட முழுவதும் கபடி விளையாடுபவராக காட்சி அமைந்திருக்கும். அப்படி படத்தின் இறுதியில் கபடி விளையாடும் போது நடிகர் விஷ்ணு களத்திலேயே உயிரிழந்து விடுவார். அதேபோன்று நிஜத்தில் ஒரு சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரங்கேறியுள்ளது. 

கபடி வீரர் விமல்ராஜ்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். 21 வயதான இவர், சேலம் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடி மீது, இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதால், சிறு வயது முதலே கபடி விளையாடி பல வெற்றிகளையும், பரிசு கோப்பைகளையும் பெற்றவர்.

கபடி விளையாடும் போது உயிரிழந்த விமல்ராஜ்:

கபடி மீது ஆர்வமாக கொண்ட விமல்ராஜ், நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் PP அணி சார்பில் விமல் ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக ஆடுகளத்தில் விமல் ராஜ் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை:

இது குறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஞ்சலி:

பிரேத பரிசோதனை பின்னர் உடல் சொந்த கிராமத்திற்ககு கொண்டு வரப்பட்டது. பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர், கல்லூரி நண்பர்கள், சக கபடி வீரர்கள் என அனைவரும் வருகை தந்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து விமல்ராஜ் உடலை நல்லடக்கம் செய்தபோது , விமல்ராஜின் நண்பர்கள் கபடி விளையாடி பெற்ற கோப்பையை விமல்ராஜ் உடலுடன் வைத்து புதைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

நிற்கதியாய் நிற்கும் பெற்றோர்:

கபடி விளையாடும் போது களத்தில் உயிரைவிட்ட விமல்ராஜ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவரின் தாய் தந்தை இருவரும் இவரையே நம்பியிருந்தனர். ஆனால் தற்போது விமல்ராஜ் உயிரிழந்துவிட்ட நிலையில், கபடி வீரரின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து நிற்கதிகாய் நிற்கின்றது. எனவே, இவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.