கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டம்... அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்பு...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி குறித்தான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்பு.
கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி ஆய்வுக்கூட்டம்... அமைச்சர் எ.வ. வேலு பங்கேற்பு...
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி குறித்தான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எ.வ. வேலு புதிதாக துவக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து, அனைத்து அரசு த்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட ரூபாய் 1 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 19 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி என் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணு, ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு ள்ள  பொதுப்பணித் துறை (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.இந்த ஆய்வு கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளிட்ட அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் தற்போது ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஒன்றியக் குழு தலைவர் துணைத் தலைவர்கள் பொறுப்புகளுக்கு வந்தவர்களும் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டத்தில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்தும், கூடுதல் தேவைகள் குறித்தும் பேசினார்கள்! தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு விளக்கிக் கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தின் நிறைவாகப் பேசிய அமைச்சர் எ.வ. வேலு புதிதாக துவக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஏராளமான கோரிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது, சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் தேவைகள் குறித்து பேசியுள்ளார்கள்.

கள்ளகுறிச்சி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி நிவர்த்தி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து அனைத்து துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 17 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 7 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூபாய் 5 லட்சம் வீதம் 35 லட்ச ரூபாய் நிதியினை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். 10 நபர்களுக்கு 2, லட்சத்து1,542 மதிப்பில் வீட்டுமனை ஒப்படை வழங்கினார்.

மேலும் கொரோனா பெருந்தொற்றினால் ஒற்றை பெற்றோரை இழந்த 18 குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நிதி ரூபாய் 54 லட்சத்தை காசோலையாக வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு 24 ஆயிரத்து 355 ரூபாய் மதிப்பில் சலவை பெட்டிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஏழு நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மேலும் புதிய மின் இணைப்பு 16 நபர்களுக்கு ரூபாய் 16 லட்சத்து 78 ஆயிரத்து 122 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு திட்ட பணி ஆணை 5 நபர்களுக்கு 13 லட்சத்து80,000 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. ஆக மொத்தம் ஒரு கோடியே29 லட்சத்து 52 ஆயிரத்து 19 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com