தனித்தீவாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி... கிராமங்கள் துண்டிப்பு.. வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

தனித்தீவாக காட்சியளிக்கும் கன்னியாகுமரி... கிராமங்கள் துண்டிப்பு..  வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் பகுதியில் குடிநீருக்கான முக்கடல் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இதனிடையே, ராஜக்காமங்களம் பகுதியில் உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்சென்றதால் பொதுமக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். 


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொடர் கனமழை காரணமாக பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பிரபல சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரப்பர், வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. .

இதேபோல், குளச்சல் பகுதியில் உள்ள முக்கிய நீர்நிலையான ஏ.வி.எம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், பெரிய பள்ளி வாசல் மழை நீரால் சூழ்ந்துள்ளதால், தொழுகை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வருவாய் துறையினர் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.