"திராவிட மாடல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் கருணாநிதியே" மு.க.ஸ்டாலின் புகழாரம்!

"திராவிட மாடல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் கருணாநிதியே" மு.க.ஸ்டாலின் புகழாரம்!

திராவிட மாடல் கோட்பாடுகளுக்கு அடித்தளம் கருணாநிதி என கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்தி வைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர்  கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுகூட்டம், சென்னை புளியந்தோப்பில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மற்றும் திரளான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது எந்தத் திட்டங்களை செய்தாலும் கலைஞர் தன் அருகில் இருப்பதாகவே உணர்வதாகவும், உடன்பிறப்புகளுக்கு இடையில்தான் என்றும் அவர் இருப்பதாகவும் முதலமைச்சர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மேலும், திராவிட மாடலைப் பார்த்து பலர் அஞ்சும் நிலை உள்ளதாக  முதலமைச்சர் தெரிவித்தார். சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல, சாமானியன் வீட்டுப் பிள்ளை எனக் கூறியவர் கலைஞர் எனவும் அவர் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறக்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், ஜூன் 23ம் தேதி பீகாரின் பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை விட யார் ஆட்சிக்கு  வரக்கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக 2024 நாடாளுமன்ற தேர்தல் இருக்கும் என்றும் பிரிவினையால் மக்களவைத் தேர்தலில் வெல்ல நினைக்கும் பாஜகவுக்கு, எந்த எதிர்கட்சித் தலைவர்களும் இறையாகி விடக் கூடாது என்றும் இந்தியாவை காப்பாற்ற சாதி மத வேறுபாடுகளை களைந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 

மேலும், தமிழ்நாடு ஆளுநரின் சித்து வேலையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக்கூறிய அவர், பொங்கி எழ வேண்டிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி என எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க கூடாது என்பது சனாதன கும்பலின் மனப்பான்மை என சாடினர்.

இதையும் படிக்க:சீர்காழி அருகே நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு!