அயன் சூர்யாவை போல் ஐடியா செய்து தங்கம் கடத்திய கில்லாடி வாலிபர் கைது...

துபாயில் இருந்து சூட்கேஸ் கைப்பிடியில் கம்பி போல் கடத்தி வந்த ரூ.16 லட்சத்தி 49 ஆயிரம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வாலிபர் கைது.
சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.
'அயன்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா வைரத்தை தினுசு தினுசாக வேடம் இட்டு விமான நிலையத்தில் அதிகாரகிகளுக்கு சந்தேகம் வராதது போல் கடத்தி செல்வார் ,அதுபோல இங்கே ஒரு வாலிபர் தங்கத்தை சூட்கேஸ் கைப்பிடியில் கம்பி போல் கடத்தி சென்றுள்ளார். துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த அந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஆனால் சூட்கேஸ் கைப்பிடி சற்று வித்தியாசமாக இருந்தது. அதை பிரித்து பார்த்த போது தங்கத்தை கம்பி போல் மாற்றி சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 16 லட்சத்தி 49 ஆயிரம் மதிப்புள்ள 15 கம்பிகள் கொண்ட 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து இந்த கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.