மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு... அக்.29ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் விசாரணைக்கு வந்த கோடநாடு வழக்கு... அக்.29ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...
Published on
Updated on
1 min read

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில்  நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மனோஜ் தவிர மற்ற அனைவரும் ஜாமினில் வெளியே வந்ததால், இவ்வழக்கில் மறு விசாரணை கோரப்பட்டது. அப்போது மறுவிசாரணைக்கு ஆஜரான சயான், முக்கிய பிரமுகர்கள் சிலரின் பெயரை மறுவிசாரணையில் தெரிவித்ததாக கூறப்பட்டது. 

இதையடுத்து வழக்கு சூடுபிடிக்கவே,  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே கடந்த மாதம் 2-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல் விசாரணை நடத்த வேண்டி போலீசார் தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 40க்கும் மேற்பட்டவர்கள்,  10 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
 
இந்நிலையில் போலீசாருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய 33 நாட்கள்  கால அவகாசம் முடிந்ததை அடுத்து வழக்கு விசாரணை இன்று அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விசாரணையின் போது பதிவு செய்த தகவல்கள்  தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறை சார்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் 6 பேரிடம் மட்டுமே புலன் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கூடுதல் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வருகிற  29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com