ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் குத்துவிளக்கு பூஜை, தீமிதி திருவிழா கோலாகலம்!

ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் குத்துவிளக்கு பூஜை, தீமிதி திருவிழா கோலாகலம்!

தமிழ்நாட்டில் ஆடிமாதத்தை ஒட்டி பல்வேறு கோயில்களில் குத்துவிளக்கு பூஜை மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வாருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சூலப்பிடாரி அம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழாவை ஒட்டி, உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ஆயிரத்து 501 பெண்கள் திருவிளக்குகள் ஏற்றி வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்தினர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கரூர் மாவட்டம் தோகை மலையில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. அதில் 560 பெண்கள் மஞ்சள், குங்குமம், பச்சரிசி, வளையல் உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு குத்து விளக்கு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், நாகையில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை ஒட்டி, குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 

இதையும் படிக்க : மணிப்பூர் சென்று திரும்பிய I.N.D.I. A எதிர்கட்சி எம்.பிக்கள் சொன்னது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே மாதா கன்னியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் உடல் முழுவதும் மஞ்சள் பூசியும், மஞ்சள் நிற உடை அணிந்தும் அம்மனைப் போல தங்களை அலங்கரித்துக் கொண்டு தீ மிதித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள காயக்காரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்சவ விழா நடைபெற்றது. கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி உற்சவத்தில் வண்ணமலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து சாமி தரிசனம் செய்தனர். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கரகம் எடுத்து அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். 

நாகை மாவட்டம் கோடியக்கரையில் அமைந்துள்ள கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவ விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் தங்களது குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டி, காத்தவராயன் வேடம் அணிந்து செடிலில் நின்றவரிடம், பக்தர்கள் தங்களது குழந்தைகளை கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் .