ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றிபெறுவோம் தீ பரவட்டும் - கேரளா....

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றிபெறுவோம் தீ பரவட்டும் - கேரளா....
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாடு அரசுக்குத் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

மேலும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பது மரபாக இருக்கும்போது, தனது பொறுப்பை மறந்து பொதுவெளியில் சமூகநீதிக்கு எதிராகப் பேசி வருகிறார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கக் கால நிர்ணயம் வேண்டும்' என்பதே அந்தத் தீர்மானம். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மணி நேரத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்குக் கையெழுத்துப் போட்டு விட்டார் ஆளுநர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது என கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் செய்யக்கோரி, மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தாங்கள் எழுதிய கடிதம் தமக்குக் கிடைத்தது. ஆளுநர் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் ஒன்றுதான். தங்களது முன்மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் வரவேற்கத்தக்கது.

வாக்காளர்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட சட்ட நடவடிக்கைகளை மிக நீண்ட காலமாக நிறுத்தி வைப்பது, மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குச் சமம்.

மாநில அரசுகளின் செயல்பாட்டை தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். கூட்டாட்சிக் கொள்கைகளை அச்சுறுத்தும் ஆளுநர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் . ஆளுநர் விவகாரத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம், தங்களது முன்மொழிவை மிகுந்த தீவிரத்துடன் பரிசீலிப்போம்" என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை அடுத்து பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நனன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எனது கடிதத்துக்கு உரிய பதிலையும், முழு ஆதரவையும் வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாடும் கேரளமும் எப்போதுமே மாநிலத் தன்னாட்சியைப் பாதிக்கும் எந்த முயற்சிக்கும் எதிரான தடுப்பரணாகத் திகழ்ந்து வந்துள்ளோம். ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றிபெறுவோம். தீ பரவட்டும்" என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com