ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை..? முன்விடுதலைக்கு குழு அமைத்தார் முதலமைச்சர்...

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுதலை..? முன்விடுதலைக்கு குழு அமைத்தார் முதலமைச்சர்...
Published on
Updated on
1 min read

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன் விடுதலை செய்வது குறித்த விரிவான வழிமுறைகள் வகுத்து தமிழக அரசால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும், ஆயுள் தண்டனை சிறைவாசிகள்,  உடல் நலம் குன்றிய சிறைவாசிகள்,  தீராத நோயுற்ற மற்றும்  மனநலம் குன்றிய சிறைவாசிகள் ஆகியோர்களின்  நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, அவர்களை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இது குறித்தான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர்  என். ஆதிநாதன் தலைமையின் கீழ், ஆறுபேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழுவில், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத் துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர்,  உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என ஐந்து  உறுப்பினர்களும்,  சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com