
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கினர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களிலும் 169 இடங்களில் ரசிகர்கள் போட்டியிட்டனர். விஜய்யின் அனுமதியுடன் அவரது புகைப்படத்தினை அச்சிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டு மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 36 பேர் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர்
13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் என்றும் தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதியில் 4 மற்றும் 2 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர் வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் கருப்படித்தட்டை காந்தி நகர் 1ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம். பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் விஜய் மக்கள் மன்றத்தினர் மேலும் பல இடங்களில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.