கொலை மிரட்டல் வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு, கொலை மிரட்டல் ஆகிய 2 வழக்குகளில் கைதான நடிகை மீரா மிதுனுக்கு, ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

சர்ச்சை நாயகியாக அறியப்பட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், சமீபத்தில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த வழக்கிலும் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.  

கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுனை, 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே, மீரா மிதுன் தரப்பில் இருந்து ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்குகளில் இருந்து மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது.