5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்ந்த சொத்து மதிப்பு…. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஐ.டி. முடிவு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில்  10 மடங்கு உயர்ந்திருப்பதால் அவருக்கு  சம்மன் அனுப்பி இது தொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்ந்த சொத்து மதிப்பு…. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஐ.டி. முடிவு!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது பணி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஜூலை மாதம் 21ஆம் தேதி, முன்னாள் அமைச்சர் மீது கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் , வியாழக்கிழமை  எம்.ஆர் விஜயபாஸ்கரின் உறவினர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 5 ஆண்டு காலத்தில் அவரது மனைவி, அவரது சகோதரர் சேகர் மற்றும் உறவினர்கள், பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது அம்பலமாகி இருக்கிறது. எனினும்  அனைத்து பண  பரிவர்த்தனைகளும் நிறுவனங்கள்  மூலமே நடந்துள்ளதால் சம்பதப்பட்ட கம்பெனி வங்கி கணக்குகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விஜயபாஸ்கரை அலுவலகம் வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.