மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றும் பணிகள் விரிவுபடுத்தப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணிகள் விரிவுபடுத்தப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  

மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றும் பணிகள் விரிவுபடுத்தப்படும்:  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் பணிகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ் சேகர், விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிகளுக்கு சுமார் 600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகளில் தொய்வு இருந்து வந்தது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் மேலும் இன்னும் இரண்டு வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

 ஓடுபாதை நீட்டிப்பு பணிகள் முடிந்த பிறகு பெயரளவில் சர்வதேச விமான நிலையமாக இருக்கும் மதுரை விமான நிலையத்தை முழுமையாக சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

 திருச்சி, கோவையை போல மதுரை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓடுபாதை விரிவாக்க பணிகளை மாநில அரசின் நிதியில் இருந்தே மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பணிகள் விரைந்து நடைபெறும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.