மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் துவங்கும் - அமைச்சர் எ.வ. வேலு

மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் ஓரிரு மாதங்களில் துவங்கும் - அமைச்சர் எ.வ. வேலு

டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

செங்கல்பட்டு-திண்டிவம் சாலையை 8 வழி சாலையாக அகலப்படுத்தல், சென்னை-தடா சாலையில் மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை ஆறு வழித்தட உயர்மட்ட சாலை அமைத்தல், திருச்சி முதல் துவாக்குடி வரையிலான உயர்மட்ட சாலை, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான உயர்மட்ட சாலை, கோயம்புத்தூர் - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். 

சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார். சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள மதுரவாயல் சாலை திட்ட பணியை விரைந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் மதுரவாயல் இரட்டை அடுக்கு பறக்கும் சாலை பணிகள் துவங்கும் என்றார்.