மாலைமுரசு செய்தி எதிரொலி.. பெருங்களத்தூரில் சுத்தமான கழிவறைகள்.. மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள்!!

மாலைமுரசு செய்தி எதிரொலி.. பெருங்களத்தூரில் சுத்தமான கழிவறைகள்..  மகிழ்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள்!!

மாலைமுரசு செய்தி எதிரொலியாக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. இதானல் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

சென்னையின் நுழைவு வாயில் பெருங்களத்தூர்:

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு நுழைவு வாயிலாக இருப்பது பெருங்களத்தூர் பகுதி. சென்னையை விட்டு வெளியேறுபவர்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருபவர்களும் இந்த பேருந்து நிலையத்தை கடக்காமல் செல்ல முடியாது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இத்தனை, முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாமல்  பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பெருங்களத்தூர் பேருந்து நிலையம்: "நம்ம டாய்லெட்"  திட்டம்

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் "நம்ம டாய்லெட்"  திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட கழிவறைகள் முறையான பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. உள்ளே சென்றாலே நோய் தொற்று வகையில், துர்நாற்றத்துடன் மிகவும் மோசமான நிலையில், கழிவறைகள் இருந்து வந்தன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். அத்துடன், இலவச கட்டண கழிப்பிடத்திற்கு, தனி நபர் ஒருவர் கட்டணம் வசூலித்து வந்தார். மாநகராட்சியின் அலட்சியப் போக்கு குறித்து, மாலை முரசு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.

மாலைமுரசு செய்தி எதிரொலி:

செய்தி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே, கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.  தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைகள் முழுமையாக சுத்தம் செய்தனர். அத்துடன், "தாம்பரம் மாநகராட்சி சார்பில் கட்டணம் இல்லா கழிப்பிடம்" என்று அச்சடிக்கப்பட்ட விளம்பர பேனரும் ஒட்டப்பட்டது. நீண்ட நாட்களாக அசுத்தமாக காணப்பட்ட கழிப்பறை, மாலை முரசு செய்தி எதிரொலியால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும்  மாறியதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.