பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்...! பண்டிகைளுக்கு ஆர்வம் காட்டும் மக்கள்..!

பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்...! பண்டிகைளுக்கு ஆர்வம் காட்டும் மக்கள்..!
Published on
Updated on
2 min read

சென்னை விமான நிலையத்தில், பண்டிகை கால விடுமுறை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு, இதை அடுத்து  விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதோடு, பயணிகள் விமான கட்டணம்  பல மடங்கு உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்து, சகஜ நிலை திரும்பி விட்டதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். 

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, வெளியூர் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வரும் 24 ஆம் தேதி தொடங்கி ஜனவரி முதல் நாளான புத்தாண்டு தினம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமும் இருப்பதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றன. இதனால் ரயில்கள், பேருந்துகளில்  ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. 

இதை அடுத்து  வெளியூர் செல்லும் பயணிகள் விமான நிலையத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவந்தபுரம் ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு சபரிமலை பக்தர்கள் கூட்டமும் அலை மோதுவதால் கொச்சி, திருவனந்தபுரம் விமானங்களிலும், வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கிறது. 

இதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு சேர்த்து 10-12 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போது அது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தூத்துக்குடிக்கு வருகை, புறப்பாடு 6 ஆக இருந்த விமானங்கள் 8 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கோவைக்கு வருகை, புறப்பாடு 10 விமானங்களாக இருந்தது, தற்போது 16 விமானங்களாக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு 6 விமானங்களில் இருந்து 8  விமானங்களும், கொச்சிக்கு 10  விமானங்களில் இருந்து 12 விமானங்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் திருவனந்தபுரத்திற்கு 4  விமானங்ளில் இருந்து  6  விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானங்களின் எண்ணிக்கை  அதிகரித்தாலும், அனைத்து விமானங்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. 

இதை அடுத்து விமான பயண டிக்கெட் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. தூத்துக்குடிக்கு வழக்கமாக 5,300 ரூபாயாக இருந்தது தற்போது ரூ.13,000-ரூ.14,500 வரையும்; மதுரைக்கு ரூ.3,600 டிக்கெட்டானது தற்போது ரூ.12000-ரூ.14,000 வரையும்; கோவைக்கு ரூ.3,500 டிக்கெட்டானது தற்போது ரூ.8,000-ரூ.13,500 வரையும்; திருச்சிக்கு ரூ.3,500 டிக்கெட்டானது, தற்போது ரூ.6,500-ரூ.10,000 வரையும்; கொச்சிக்கு ரூ.3,500 டிக்கெட்டானது, தற்போது ரூ.10,000-ரூ.19,500 வரையும்; திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150 டிக்கெட்டானது, தற்போது ரூ.12,000-ரூ.21,000 வரையிலும் அதிகரித்துள்ளன.

டிக்கெட் விலைகள் பல மடங்கு உயர்ந்தாலும், சொந்த ஊர்களில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து, விமானங்களில் பயணிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com