பாலஸ்தீனம் மீதான போரை  நிறுத்த மே 17 இயக்கம் பேரணி!

பாலஸ்தீனம் மீதான போரையும், பாலஸ்தீன குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும் இஸ்ரேல் அரசு கைவிட வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே மே 17 இயக்கம், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். 

இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே கடந்த சில வாரங்களாக தொடர் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதில் 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் உயிர் இழந்துள்ள நிலையில், குழந்தைகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் மே 17 இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த பேரணியில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதோடு, தொடர்ச்சியாக பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அரசு போர் மரபை மீறி மருத்துவமனையில் குண்டு போட்டு இதுவரை 2500 குழந்தைகளை இனப்படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து, இஸ்ரேல் போர் நடத்துவோம் என்று சொல்வது மனித உரிமை மீறல். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு அளவற்ற ஆதரவைத் தந்து வருகின்றன. இஸ்ரேல் அரசை இந்திய அரசு நேரடியாக ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை, இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்த எந்த கட்சியும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதானி என்ற ஒரு நபருக்காக மோடி அரசு ஆதரவு தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். மோடி அரசு தன்னுடைய வெளியுறவு கொள்கையை மாற்றி பாலஸ்தீனம் பக்கம்  நிற்க வேண்டும் எனக் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com