மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைந்தது.. வீடுகளுக்கு திரும்பும் மக்கள்!!

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைந்தது.. வீடுகளுக்கு திரும்பும் மக்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு குறைந்ததால் கிராம மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர்.

2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் சென்றது. இதனால் ஆற்றின் நடுவே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட திட்டு கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிளும், ஆற்றின் கரையில் பந்தல் அமைத்தும் தங்கியிருந்தனர்.

வெள்ளம் வடிந்ததால் வீடுகளுக்கு திரும்பும் மக்கள்

இந்நிலையில், தற்போது ஆற்றில் நீரின் அளவு குறைந்ததால் முகாம்களில் தங்கியிருந்த கிராம மக்கள், தங்களது உடமைகளுடன் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே, நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராமங்களில் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டி இருந்த சோளம், கத்தரி உள்ளிட்ட காய்கறி செடிகளும், மல்லிகை, முல்லை போன்ற மலர் செடிகளும் 4 நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியிருந்ததால் முற்றிலும் அழுகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.