அரசு பள்ளி வகுப்பறையில் 10 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட மெகா பள்ளம்: பீதியில் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் ...

அரசு பள்ளி வகுப்பறையில், திடீரென்று மெகா பள்ளம் ஏற்பட்டதால், மாணவர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி வகுப்பறையில் 10 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட மெகா பள்ளம்: பீதியில்  மாணவர்கள் அலறியடித்து  ஓட்டம் ...

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது நீர்நிலைகள் முழுமையாக நிரம்பிய நிலையில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனையடுத்து வெள்ளம் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புகுந்தது. பள்ளியின் சுற்றுச் சுவர், நீர் ஏற்றும் அறை உடைந்தும், மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததோடு வகுப்புகளில் வெள்ளம் தேங்கியது.

கடும் வெள்ளத்தின் வேகத்திற்கு பள்ளி கட்டிடங்களின் அடித்தளத்தில் அரிப்பு ஏற்பட்டு மணல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் மழை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது  வகுப்பறையில் திடீரென்று பள்ளம் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

பீதி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை விட்டு ஓட்டம் பிடித்தனர். நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்நிலையில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும்  உடனடியாக சேதமடைந்துள்ள பள்ளி கட்டடத்தை சீரமைத்து தர்க்கோரியும்  பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.