மேல்மலையனூர் கோவில் விபத்து...! உயர் நீதி மன்றம் தீர்ப்பு...!!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, தகரத்திலான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
மின் விளக்குகளுக்காக போடப்பட்டிருந்த ஒயர்கள் அறுந்து தகரத்தின் மீது பட்டதால், வரிசையில் நின்றிருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ராணி, பச்சையம்மாள், முருகன், திருக்கழுக்குன்றம் ரவி உள்ளிட்ட 6 பேர் பரிதபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், 37 பேர் படுகாயமடைந்து செஞ்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, விழாவுக்கு ஒலி, ஒளி ஏற்பாடு செய்திருந்த ராஜா மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் மீது வளத்தி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை ரத்து செய்து தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, மின் திருட்டு குற்றச்சாட்டில் கோவில் நிர்வாகிகளும், அறங்காவலர்களும் பொறுப்பாகி இருக்க வேண்டிய நிலையில், குற்றப்பத்திரிகையில் அவர்கள் சேர்க்கப்படாமல் சவுண்ட் சர்விஸ் நபர்களை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இந்த வழக்கை பொறுத்த வரை, மரணம் விளைவிக்கும் நோக்கத்துடன் ராஜா செயல்பாட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை எனவும், கவனக்குறைவாக மரணம் ஏற்படுத்தியதாகத்தான் கூறமுடியும் என கூறி 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து ஏற்கனவே சிறையில் இருந்த 119 நாட்கள் சிறை தண்டனையே போதுமானது என தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிக்க:கீழ்பவானி ஆற்றை கான்கிரீட் தளமாக மாற்றும் முயற்சி...! கைவிட சீமான் வலியுறுத்தல்...!!