மெரினாவை அலங்கரிக்கும்  உலோக சிற்பங்கள்... சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி...

மெரினா கடற்கரையை போல் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்களை சென்னையில் உள்ள 15 இடங்களில் விரைவில் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தகவல் தெரிவித்தார்.

மெரினாவை அலங்கரிக்கும்  உலோக சிற்பங்கள்... சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி...
பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து  மறுசுழற்சி செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகள் மற்றும் புதுப்பேட்டை , பேசன்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் உள்ள காலவதியான வாகன கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்து பணிகள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது.
 
அதன்படி, வாகன கழிவுகளில் மீன், நண்டு, ஜல்லிக்கட்டு காளை, பரதநாட்டியம், மிருதங்கம், இறால், விவசாயி உள்பட 14 வகையான சிற்பங்களை வடிவமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்ததோடு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வாகன கழிவுகள் மூலம் வடிவமைக்கட்ட அந்த சிற்பங்கள் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் சிற்பம் வைக்கப்பட்டுள்ள நிலையில்,வரும் நாட்களில் தலைமை செயலகம், விமான நிலையம், பெசண்ட் நகர் கடற்கரை, கோயம்பேடு உள்ளிட்ட 15 இடங்களிலும் சிற்பங்களை வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறினார்.
 
உலோக கழிவுகளில் இருந்து இதுபோன்ற அழகான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு,பொது இடங்களில் வைக்கும் போது, பொதுமக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைவதோடு, பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.