ஆவின் நெய் விலை: கண்டனம் தெரிவித்த பால் முகவர்கள்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஆவின் நெய் விலை: கண்டனம் தெரிவித்த பால் முகவர்கள்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஆவின் நெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் நெய் விலை உயர்வு:

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஆவின் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 

அமலுக்கு வந்த புதிய விலை:

இந்நிலையில் பொதுமக்களையும், சில்லறை வியாபாரிகளையும் மீண்டும் அதிருப்திக்குள்ளாக்கும் விதமாக, ஆவின் நெய் விலையை 50 ரூபாயாக உயர்த்தி ஒரு லிட்டர் நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருவதாக சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய விலை அமலுக்கு வந்துள்ளது. 

3வது முறையாக உயர்ந்த விலை:

அதன்படி, கடந்த 9 மாதங்களில் இது 3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்படுள்ளது. முதலில் கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும் , ஜூலை மாதம் 535 லிருந்து 580 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தியில் மக்கள்:

ஆவின் நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பு சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆவின் நெய் உயர்வு தொடர்பாக தமிழக அரசிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, மார்கழி மாதத்தில் நெய் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கும் எனவும், இந்த காலகட்டத்தில் நெய் விலையை உயர்த்தி, அதையும் இன்று முதல் அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, ஆவின் நெய்யின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கோரிக்கை வைத்த பால் முகவர்கள்:

அதேபோன்று, நெய் விலை உயர்வு தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு, அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 9 மாதத்தில் 3 வது முறையாக ஆவின் விலையை உயர்த்தி மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் அதுவும் நடப்பாண்டில் கடந்த 9மாதங்களில் நடைபெறும் மூன்றாவது விலையேற்றம் இது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் இந்த ஆவின் நெய் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

பால் முகவர்களும், பொது மக்களும் ஆவின் நெய் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com