” ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு நேரத்தில் ஒரு பணி மட்டுமே வழங்க நடவடிக்கை...” - அமைச்சர் எ.வ.வேலு

” ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு நேரத்தில் ஒரு பணி மட்டுமே வழங்க நடவடிக்கை...” - அமைச்சர் எ.வ.வேலு

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சைதாப்பேட்டை பஜார் சாலை முதல் ஜோன்ஸ் சாலை வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிகள் நடைபெறாமல் தடை ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை இருப்பினும் சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து 20 நாட்களாக சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க தொடர்ந்து முடுக்கிவிட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும், ஒரே ஒப்பந்ததாரரக்கு நிறைய பணிகள் வழங்கியதால் பணிகள் முடிவடையா சூழல் ஏற்பட்டுள்ளதா என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதனை முழுமையாக தான் ஏற்றுக்கொள்வதாகவும், ஒவ்வொரு ஒப்பந்ததாரரக்கு ஒரு பணி வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் , ஒரே ஒப்பந்ததாரருக்கு நிறைய பணிகள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது எனவும் பணிகள் டெண்டர் மூலமே வழங்கப்பட்டு வருகிறது, ஒரு ஒப்பந்ததாரரக்கு ஒரு நேரத்தில் ஒரு பணி மட்டுமே வழங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்தார்.

அதேபோல குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் குழிகளை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்த பின் அந்த சாலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க : நெய்தல் ஆற்றில் சிறுபாலம் உடையும் அளவு கரைபுரண்டோடிய வெள்ளம்...