காணாமல் போன ரயில்வே ஊழியர்... ஒன்றரை நாள் கழித்து முட்புதரில் உயிருடன் மீட்பு...

திருவள்ளூர் அருகே காணாமல் போன ரயில்வே ஊழியர் ஒன்றரை நாள் கழித்து முட்புதரில் உயிருடன் மீட்கப்பட்டார்.

காணாமல் போன ரயில்வே ஊழியர்... ஒன்றரை நாள் கழித்து முட்புதரில் உயிருடன் மீட்பு...

திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு, வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் வீரராகவன் (53). இவர் ரயில்வே ஊழியர். இவர் கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். ஆனால் மறுநாள் 28 ஆம் தேதி காலை அவர் திடீரென வீட்டில் காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செவ்வாப்பேட்டை போலீசில் புகைப்படத்தை கொடுத்தும், அங்க அடையாளங்களை தெரிவித்தும் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன வீரராகவன் தேடிவந்தனர்.

இந்நிலையில் கந்தன் கொள்ளை, வான்மதி நகர் அருகே உள்ள ஏரியில் ஒருவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒருவரின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்தபோது முள்புதரில் ஒருவர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செவ்வாய்பேட்டை உதவி ஆய்வாளர் கனேசன்.சங்கர்பாபு.தலைமை காவலர்கள் ரமேஷ் மற்றும் பாலாஜி ஆகியோர்  ஒன்றரை நாளாக  தண்ணீரில் முனகலுடன் மிதந்து கொண்டிருந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த நபர் யார் என்று விசாரித்த போது காணாமல் போன ரயில்வே ஊழியர் வீரராகவன் தான் என தெரிய வந்தது. காணாமல் போன ரயில்வே ஊழியர் ஏரியின் முட்புதருக்குள் இருந்து காவல்துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம்  பெரும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.