மத்திய அரசை விமர்சித்து முரசொலி நாளிதழில் கட்டுரை...!

மத்திய அரசை விமர்சித்து முரசொலி நாளிதழில் கட்டுரை...!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் மத்திய அரசை விமர்சித்து திமுகவின் நாளிதழ் ஆன முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.

விலை உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர்:

கடந்த சில மாதங்களாகவே வணிக மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப சிலிண்டர் விலை மாறுபடும். அதன்படி கடந்த மே மாதத்தில் மட்டும் 2 முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த அதிருப்தி நீங்கும் முன்னரே அடுத்தபடியாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும்  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சியில் செய்வதறியாது நிற்கின்றனர்.

மத்திய அரசை கண்டித்து முரசொலி நாளிதழ் கட்டுரை:

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தும் போதெல்லாம் சர்வதேச சந்தையை காரணமாக காட்டுவதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக திமுக நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. விலை ஏற்றத்திற்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் பொதுத்துறை நிறுவனங்கள்தான் விலைகளை நிர்ணயம் செய்கிறது என்றும் மத்திய அரசு சொல்வதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

ஆனால், ஏதாவது ஒரு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வந்தால், அதுவும் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் மாநிலமாக இருந்தால் அங்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயராமல் பார்த்துக் கொள்வதாகவும், அப்போது சர்வதேச சந்தை குறித்த சத்தமே இருக்காது என்றும் சாடியுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் முடிந்தவுடன் இவை அனைத்தும் அடக்கி வைக்கப்பட்ட பூதங்களாக வெளியில் கிளம்பி வரும் என்றும் அப்படிதான் இப்போதும் விலை உயர்ந்து கொண்டு வருவதாகவும் முரசொலி தான் வெளியிட்டுள்ள கட்டுரையில் கண்டனம் தெரிவித்துள்ளது.