பெண் குரலில் பேசி ஏமாற்றி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியவர் தலையில் கல்லை போட்டு கொலை...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியவரை, தலையில் கல்லை தூக்கிப் போட்டுக் கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண் குரலில் பேசி ஏமாற்றி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியவர் தலையில் கல்லை போட்டு கொலை...

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கோவில்பட்டி மேல ஈரால் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நபர் பெண்குரலில் பேசியுள்ளார்.

அவரைப் பெண் என நம்பிய காஞ்சிபுரம் முருகனும் அவருடன் மணிக்கணக்கில் பேச அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் நேரில் சந்தித்தனர்.

அப்போது தன்னுடன் செல்போனில் பேசியது கோவில்பட்டி முருகன் என்பதும், செல்போனில் இருந்த ஆஃப் மூலம் குரலை மாற்றிப் பேசியதும் காஞ்சிபுரம் முருகனுக்கு தெரியவந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் முருகனை சமாதானம்  செய்த கோவில்பட்டி நபர் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.  

மேலும் வீடியோவை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காஞ்சிபுரம் முருகன், கோவில்பட்டி வந்து, குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார்.

அதனைக் குடித்து மயக்கமடைந்த கோவில்பட்டி முருகனைத் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காஞ்சிபுரம் முருகனைக் கைது செய்து சிறையிலடைத்தனர்