சென்னையைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை...
கேரளாவில் ஹெராயின் மற்றும் ஆயுதம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கேரளாவின் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி படகு ஒன்றில் கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடத்தலில் தொடர்புடைய சுரேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களின் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வளசரவாக்கத்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழர் சபேசன் வீட்டில் நடைபெற்ற ஆய்வில் பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.