"என்.எல்.சி முற்றுகை போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது" -உயர்நீதிமன்றம்!

"என்.எல்.சி முற்றுகை போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது" -உயர்நீதிமன்றம்!
Published on
Updated on
1 min read

என்எல்சி நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தொழிற்ச்சங்கம் தரப்பில் கடந்த 8 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்.எல்.சி. தரப்பில் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்லாமல் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சட்டத்தை உங்கள் கையில் எடுத்து கொண்டு அனுமதிக்கப்படாத இடத்தில் அதுவும் என்எல்சி தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தார். மேலும், போராட்டம் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயிக்கும் படி கடலூர் மாவட்ட எஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று கடலூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். என்எல்சி நிர்வாகத்திற்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்சனையை தீர்வு காணும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அன்றைய தினம் விவாதிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com