நளினிக்கு ஒரு மாதம் பரோல்... விரைவில்  வழங்க தமிழக அரசு முடிவு...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு, ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நளினிக்கு ஒரு மாதம் பரோல்... விரைவில்  வழங்க தமிழக அரசு முடிவு...
Published on
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை, ஒரு மாதம் பரோலில் வெளிவிடக் கோரி அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 11 பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றிய சட்டமன்ற தீர்மானம், ஆளுனரிடம் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியிருந்த அவர், உடல்நலக் கோளாறால் அவதிப்படும் தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக, நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்மாவின் கோரிக்கை மனு, அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறிய அரசு வழக்கறிஞர், அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அவகாசம் கோரியதால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா தெரிவித்தார். இதனையடுத்து நளினியின் தாயார் பத்மாவின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

ஏற்கனவே, பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது நளினிக்கும் ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நளினி விரைவில் பரோலில் வருவார் என்று தெரிய வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com