நாமக்கல் : களைகட்டும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை..! தொடங்கி வைத்த ஆட்சியர்...!

நாமக்கல் : களைகட்டும் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை..! தொடங்கி வைத்த ஆட்சியர்...!

நாமக்கல் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்து கொண்டு சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

வருகிற அக்டோபர் மாதம் வரை நடைபெறும் சிறப்பு விற்பனையில் பருத்தி மற்றும் புதிய ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும், விசைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசல் ஜரிகையுடன் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் ரூ. 5000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் ஆரணி பட்டுப் புடவைகள், மென் பட்டுப் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதோடு அனைத்து ரக காட்டன் புடவைகள், ஆர்கானிக், களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த ஆண்டு நாமக்கல்லில்  உள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தின்  மூலம் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்த ஆட்சியர், இங்கு துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் காய்ச்சல் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும், மாவட்டத்தில் ஆயிரம் மருத்துவ முகாம்கள் நேற்று முதல் அமைக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் ராசிபுரம் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம், நகர்மன்ற தலைவரின் வீட்டில் நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுதொடர்பான குற்றச்சாட்டு நேற்று தான் கிடைக்கப்பெற்றது எனவும் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.