"நம்ம ஸ்கூல்" திட்டம் - கல்வியில் நம்பர் ஒன் ஆகப்போகும் தமிழ்நாடு!

”நம்ம ஸ்கூல்” திட்டத்திற்கு பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி உதவி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"நம்ம ஸ்கூல்" திட்டம் - கல்வியில் நம்பர் ஒன் ஆகப்போகும் தமிழ்நாடு!

கல்வி மேம்பாட்டு திட்டம் 

தமிழ்நாட்டில் உள்ள 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகளாக மாற்றும் விதமாக ”நம்ம ஸ்கூல்” என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி ஐ.டிசி. சோழா ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

நிதியுதவி வழங்க வேண்டும் 

இத்திட்டத்தில் அரசின் பங்களிப்பு மட்டுமல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வு நிதியை பெற்று  அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி

இதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைய தளத்தில் இணைந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் அளிக்கப்படும் நிதி குறிப்பிட்ட அந்த பணிக்கு முறையாக செலவிடப்படுகிறதா? என்பதையும் இந்த இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | “எல்லார்க்கும் எல்லாம்” - அறிக்கை வெளியிட்டு நூற்றாண்டு வளைவை திறந்து வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலிடம்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரமான கல்வி வழங்குவதில், தமிழ்நாடு நம்பர் ஒன் இடம் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு நிதியாக 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார்.