
நாங்குநேரி பகுதியில் 17 வயது மாணவன் மற்றும் அவருடைய தங்கை ஆகிய இருவர் மீதும் சக மாணவர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சென்ற மாதம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவன் மற்றும் அவரது சகோதரியை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்த சின்னத்துரையும் அவரது சகோதரியும் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு இப்பொழுது அவர்கள் உடல்நலம் தேறி வருகின்றனர். பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர்களாலேய வெட்டப்பட்ட இந்த சம்பவம் தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் அவர்களுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள். இதனையொட்டி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அந்த நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.