தேசிய கல்விக் கொள்கை வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்- தமிழக அரசு சார்பில் வலியுறுத்தல்!

மத்திய அரசு  கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை  இடை நிற்றலை அதிகரிக்கும் என்று தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்- தமிழக அரசு சார்பில் வலியுறுத்தல்!

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில்  அமல்படுத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு  இன்று  விசாரணைக்கு  வந்த போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035 ல்  50 சதவீதமாக ஆக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், 51.4 சதவீதம் சேர்க்கை விகிதத்துடன் 15 ஆண்டுகள் தமிழ்நாடு முன்னோக்கி பயணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி என்பது மாநில கொள்கை என்றும்  தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளதாகவும்  தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாநில கல்வி கொள்கையை வகுக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.