குப்பைகள் கொண்டு செல்லும் வாகனத்தில் தேசியக்கொடி விநியோகம்...!

குப்பைகள் கொண்டு செல்லும் வாகனத்தில் தேசியக்கொடி விநியோகம்...!

தேனி பெரியகுளம் அருகே, குப்பைகள் கொண்டு செல்லும் வாகனத்தில், தேசியக்கொடி எடுத்துச் சென்று பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேசியக்கொடி விநியோகம்:

நாடு முழுவதும் 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்குத் தேசியக் கொடி விநியோகம் செய்யப்படுகிறது. 

குப்பை வண்டியில் தேசியக்கொடி:

இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வீடு வீடாகச் சென்று தேசியக் கொடிகள் வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் தென்கரை பாரதி நகர் பகுதியில், வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்லும் வாகனத்தில், தேசியக்கொடிகள் ஏற்றி வந்து விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

குப்பைகள் அள்ளும் வாகனத்தில் தேசியக் கொடி ஏற்றி வரப்பட்டது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமின்றி இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.