நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!!

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வு விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பிரதமரை கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி நேரில் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டார். இதுகுறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்ததாக கூறிய முதலமைச்சர், சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டத்தை நிறைவேற்றும்போது ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தான் மக்களாட்சியின் தத்துவம் எனவும், நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனபதே அனைவரின் இலக்கு என்றும் குறிப்பிட்டார். தமிழக மாணவர்களின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம் எனவும் கூறினார். 

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் எனவும் உறுதிபட கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மாணவர்கள் தவறான முடிவுகள் எடுப்பதை தடுக்க உளவியல் ரீதியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.