மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வு அல்ல; அது பலிபீடம் என சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்டிவு மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர், பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த பேரவையில், தற்போது நீட் விலக்கு பெறுவதற்காக மட்டும் நாம் கூடவில்லை, சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே கூடியுள்ளோம் என்றார்.

நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்ட ரீதியாக உருவாக்கப்பட்டதல்ல என்றும், நீட் தேர்வு பாகுபாட்டை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். நீட் தேர்வால் ஏராளமான மாணவச் செல்வங்களை நாம் இழந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை போற்றும் போது, நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது எனவும், அதனால் தான் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு குறித்து தமிழக அரசு வலியுறுத்தி வந்தாலும், புரிய வேண்டியவர்களுக்கு இன்னும் புரியவில்லை எனக் கூறிய முதலமைச்சர், இந்த விவகாரத்தில் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என உறுதிபட தெரிவித்தார். நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதில், தமிழக சட்டப்பேரவையின் மாண்பு பறிபோயிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதன் மூலம் மாநில அரசின் உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.