மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு வேண்டாம்: கொந்தளித்த நடிகர் சூர்யா

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு குறித்து உடனடியாக அனைவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு வேண்டாம்: கொந்தளித்த நடிகர் சூர்யா

அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பு ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரியளவில் நடிகர் சூர்யா உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து அவர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம் என்றும், 

ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பு, பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் 20 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விகளுக்கு செல்வதாகவும், தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பின்பும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது சமூக அநீதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டதாகவும், மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையடுத்து, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து கண்டறிய தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் கருத்து தெரிவிக்கும்
படியும், அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் மாணவர்களும், அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் வரும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் மின்னஞ்சல் மூலம் சமர்பிக்குமாறு நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com